வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு உரம் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் பெரும்பாலானோர் தற்போது காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வளர்த்து தோட்டம் அமைத்து வருகின்றனர். இப்படி வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதாது. அதற்கான உரங்களையும் போட வேண்டும். அப்போது தான் செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து பயன் அளிக்கும். இந்த தோட்டங்களுக்கு கடைகளில் கிடைக்கும் உரங்களை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையெனில் வீடுகளிலும் சொந்தமாக உரங்கள் தயாரிக்கலாம். இனி வீடுகளில் எப்படி உரம் தயாரிக்கலாம் என்பது குறித்த சில வழிமுறைகளை பார்க்கலாம்.
அதாவது முதலில் சமையலறையில் பயன்படுத்தும் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கலாம். இதில் சமைத்த கழிவுகள், சமைக்காத கழிவுகள் என தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும். இந்த உரங்களை தனி வீடுகளில் இருப்பவர்கள் மட்டுமே தயாரிக்க முடியும். இதற்காக முதலில் 3 அடி குழி தோண்ட வேண்டும். இந்த குழியில் சமைத்த மற்றும் சமைக்காத கழிவுகள் அனைத்தையும் கொட்டலாம். இந்த குழியில் சைவ மற்றும் அசைவ கழிவுகளையும் போடலாம். இந்தக் குழி 80% நிரம்பியதும் குழியை மூட வேண்டும். இதனையடுத்து 3 மாதம் ஆன பிறகு கழிவுகள் நன்கு மட்கி உரமாகி விடும்.
அதன்பிறகு அனைத்து குடியிருப்புகளிலும் வசிக்கும் மக்கள் இந்த மாதிரியான உரத்தை தயாரிக்கலாம். அதாவது உரம் தயாரிப்பதற்கு பெரிய மண் பானைகள் அல்லது பேரல்களை பயன்படுத்தலாம். இந்த பேரல்களில் சிறிய துளைகளை போட வேண்டும். அதன்பிறகு பேரலில் சமையல் செய்யாத அனைத்து கழிவுகளையும் போடலாம். ஆனால் தக்காளிப் பழத்தை மட்டும் சிறிது காயவைத்து பேரலில் போட வேண்டும். அதே நேரத்தில் முழுமையாக காய்ந்த தக்காளிப் பழத்தையும் பேரலில் போடக்கூடாது.
இந்த பேரல்கள் நிரம்பிய பிறகு சிறிது மண் புழு உரம் அல்லது வேஸ்ட் டீ கம்போசர் என்ற திரவத்தை போடலாம். இது கிடைக்காத பட்சத்தில் சாணத்தை பேரல்களில் போடலாம். ஆனால் வெங்காய தோல் மற்றும் ஆரஞ்சு பழத்தோலை உரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. இந்த உரத்தை ஒரு வாரம் வரை நன்கு கிளறி விட வேண்டும். இந்த உரத்திற்கு எறும்பு வராமல் தடுப்பதற்காக பேரல்களை சுற்றி மஞ்சள்தூளை போடலாம். இல்லையெனில் தண்ணீர் வைத்த பாத்திரத்தின் மேல் பேரல்களை வைக்கலாம்.
இந்த உரங்களில் காய்ந்த குச்சிகள், மரக்கட்டைகள் போன்றவற்றை சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் உரம் மட்குவதற்கு அதிக நாள் ஆகலாம். இதனால் காய்கறி கழிவுகள், பழத்தோல்கள், காய்ந்த பூக்கள், இலைகள், முட்டை ஓடுகள் போன்றவற்றையும் பேரல்களில் போடலாம். இந்த கழிவுகள் 1 மாதத்தில் மட்கி உரமாகிவிடும்.
இந்த உரங்களை எப்படி பயன்படுத்தலாம் என இனி பார்ப்போம். இந்த உரங்கள் மட்கிய பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு செடிகளுக்கு வைத்தால் போதும். இந்த உரத்தை மரங்களுக்கு 1 மாதத்திற்கு ஒரு முறை 4 கிலோ வைக்க வேண்டும். இந்த உரங்களில் கூடுதல் சத்துகளை சேர்த்தால் செடிகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மட்கிய உரங்களில் ஈரப்பதம் இருக்க வேண்டும். எனவே இந்த உரங்களை ஒரு பையில் போட்டு சேமித்து வைக்கலாம். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி வீட்டில் சுலபமான முறையில் உரம் தயாரித்தால் கடையில் உரம் வாங்குவதற்கான செலவு குறையும்.