தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. அதில் பூண்டி ஏரியில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் மணலி புதுநகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் எதிரில் உள்ள லட்சுமி நகர், ஐயப்பன் நகர் மற்றும் வடிவுடையம்மன் நகர் ஆகிய பகுதிகளில் முட்டு அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் சிக்கி தவித்த 50க்கும் மேற்பட்டவர்களை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் மீட்டு வந்து அவர்களை மாநகராட்சி சார்பில் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதனைப்போலவே மணலி கலைஞர் நகரில் வீடுகளில் சிக்கித்தவித்த 80 பேர் மற்றும் சின்ன மாத்தூர் பகுதியில் 30 பேர் மீட்டு அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து புழல் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த புழல் ஏரி உபரி நீர் கால்வாய் வழியாக வரும் தண்ணீர் வடபெரும்பாக்கம் கொசப்பூர், ஆமுல்லைவாயில், சடயங்குப்பம் மற்றும் பர்மா நகர் வழியாகச் சென்று எண்ணூர் முகத்துவாரம் அருகிலுள்ள கடலுக்கு சென்று அடையும்.
இந்நிலையில் தண்ணீர் வரத்து அதிகமாக வருவதால் சடயங்குப்பம் மற்றும் பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதனைப் போலவே சந்திப்பு பகுதியில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து செல்வதால் மணலி செல்பவர்கள் சி.பி.சி.எல். கம்பெனி வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதனைப் போலவே மணலி புதுநகர், மிஞ்சூர் மற்றும் மாதாவரம் செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றுக்கொன்று மோதி சேதம் அடைந்தது. அதில் 35 மேற்பட்ட விசைப்படகுகள் முழுவதுமாக சேதமடைந்து 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் சிறிதளவு சேதம் அடைந்துள்ளது. மேலும் கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகள் சேதம் அடைந்துள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.