பேரூர் அருகே செம்மேடு திருவிக வீதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த பகுதி தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கின்றது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவிக வீதியில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது.
மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென அந்த பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இருட்டு பள்ளம் பூண்டி செல்லும் சாலையில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம் ஆலந்துறை போலீசார் போன்றோர் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனை அடுத்து மோட்டார் வைத்து தேங்கி இருந்த சாக்கடை கழிவு நீரை அகற்றி உள்ளனர்.
தோட்டத்து உரிமையாளர்கள் அடைத்து வைத்திருந்த நிலவியல் ஓடை பாதைகளை உடைத்து மழை நீரை வெளியேற்றி இருக்கின்றனர். இதற்குப் பின் நிரந்தர தீர்வு காணும் விதமாக ஒரு மாதத்தில் கழிவுநீர் தேக்க தொட்டி மோட்டார் மூலம் கழிவுநீர் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பொதுமக்களும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக முன் அனுமதி இல்லாமல் சாலை மறியல் ஈடுபட்டதாக செம்ம மேடு திருவிக நகரைச் சேர்ந்த மணிகண்டன் உட்பட 40 பேர் மீது ஆழந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.