வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி நகரில் 20 நாட்களாக பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மவுலிவாக்கம்-மாங்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடடத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மழை நீரை அகற்ற உரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.