சட்டவிரோதமாக கஞ்சாவை டெலிவரி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதிகள் சட்டவிரோதமாக வீடுகளுக்கு சென்று கஞ்சா டெலிவரி செய்யப்படுவதாக போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை கமிஷனர் மகேந்திரன் தனிப்படைகளை அமைத்து அப்பகுதியில் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி தனிப்படை காவல்துறையினர் வேளச்சேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரகுமான் என்பதும், சிலரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி பொதுமக்களுக்கு டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இதில் தொடர்புடைய ரகுமான், பாஸ்கர், தாமோதரன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.