கொரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள முடியாமல் வீடுகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக கமிஷனர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெங்களூரில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த வித அறிகுறியும் பாதிப்பும் இல்லாமல் இருந்தாலோ அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள். நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் வீட்டில் காவலில் வைக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு வீட்டில் இருக்கும் நோயாளிகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆஷா திட்ட பணியாளர்கள் உடல்நலம் குறித்து பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நோயாளிகள் மற்றும் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் தேவை இல்லாமல் வெளியே செல்வதை தடுக்க அவர்களது வீடுகளுக்கு உணவு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி செய்து கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது நோயாளிகளுக்கும் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் மாநகராட்சி எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை. குறிப்பாக மருந்துகளையும் கொடுப்பது இல்லை என்கிற புகார்கள் எழுந்து வருகின்றன.
இரு நாட்களுக்கு ஒருமுறை ஆஷா திட்ட பணியாளர்கள் நோயாளிகளுக்கு உடல் நலம் பரிசோதனை செய்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக எந்த வீடுகளுக்கும் நேரடியாக சென்று துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை அள்ளி செல்வதில்லை என்று நோயாளிகள் கூறியுள்ளனர். சில நோயாளிகள் 22 நாட்களாக வீட்டில் இருப்பதாகவும் அவர்களுக்கு பரிசோதனை நடத்தி சான்றிதழ் ஏதும் வழங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் அரசு கூறிய விதிமுறைகளை மீறி கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. நகராட்சியின் அலட்சியம் காரணமாக இது போன்ற சம்பவங்கள் பெங்களூருவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர் அருகே உள்ள இரண்டு குடியிருப்பு பகுதியின் கதவுகளை மாநகராட்சித் துறை பணியாளர்கள் தகடுகளை கொண்டு அடைத்து வைத்துள்ளனர். இந்த குடியிருப்பில் ஒரு வீட்டில் வயதான தம்பதியும் மற்றொரு வீட்டில் இரு குழந்தைகளுடன் ஒரு பெண்ணும் வசித்து வந்தனர். அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாதபடி வெள்ளை தகடு கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் அந்த வீடுகளை சீல் வைத்து அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது விமர்சனத்தை தூண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து பெங்களூர் நகராட்சியின் கமிஷனர் மஞ்சுநாத பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தடுப்புகளை உடனடியாக கழற்றுவதை உறுதி செய்துள்ளதாகவும் உள்ளூர் ஊழியர்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்டும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, “இந்த தடுப்புகளை உடனடியாக அகற்றுவதை உறுதி செய்துள்ளேன். அனைத்து நபர்களையும் கண்ணியமாக நடத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மாநகராட்சியை கட்டுப்படுத்திய நோக்கம் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருப்பதும் அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது. எந்த ஒரு சிக்கலையும் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் ஊழியர்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் பதிவிட்டிருந்தார்.