தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கடந்த மே 16-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.