வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தர்ம சமுத்திரம் கிராமத்தில் இருக்கும் செங்கால் ஓடை அருகே பல ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வீடு அமைந்துள்ள பகுதியை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆண்டிமடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, செங்கல் ஓடைக்கும் எங்களது குடியிருப்புக்கு 500 மீட்டர் தூரம் உள்ளது. நாங்கள் தேசிய நெடுஞ்சாலை அருகே தான் வாழ்ந்து வருகிறோம். எனவே தனி குழு அமைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை பார்வையிட வேண்டும். மேலும் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.