வீடு வழங்குவதில் முறைகேடு செய்ததாக கூறி பயனாளிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 264 வீடுகள் உள்ளது. இதற்கான பயனாளிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும் பணி நடைபெற்றது. அப்போது குழுக்கள் முறையில் கோடீஸ்வரர்கள் மற்றும் நகை கடை அதிபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற பயனாளிகள் தகுதியுடைய ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே வீடு வழங்க வேண்டும் எனக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், நகர் மன்ற தலைவர் திருநாவுக்கரசர், துணை தலைவர் வைத்தியநாதன், மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்படும். அதன்பின்னர் பட்டியலை மருதணிக்கை செய்து தகுதியுடைய ஏழைகளுக்கு மட்டும் வீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னர் பயனாளிகள் அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.