Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்”… கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் பேச்சு…!!!!

சாத்துமதுரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்திலுள்ள கணியம்பாடி ஒன்றியம் சாத்துமதுரை ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ்ய தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்க ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் ஊராட்சி மன்றத்தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க ஊராட்சி செயலாளர் சரத்குமார் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது, அனைத்து அடிப்படை வசதிகளும் கிராமத்திற்கு செய்து தரவேண்டும். ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூரில் இருக்கும் பொது மக்களுக்கு பட்டா இல்லை, வீடு இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது. மேலும் அரசு பள்ளிகளுக்கு தேவையான திட்டங்களை பூர்த்தி செய்து தரப்படும் என கூறியுள்ளார்.

இதையடுத்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவை சாத்துமதுரை கிராம பேருந்து நிறுத்தத்தில் சரியாக பேருந்துகள் நிற்பதில்லை. ஆகையால் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரினார்கள். மேலும் தினமும் ரேஷன் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |