வீடு கட்டி கொடுக்க தாமதமானதால் பாதிக்கப்பட்டவருக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு ஒப்பந்ததாரருக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அம்மனம்பாக்கம் கொள்ளைமேடு பகுதியில் ரவி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பழங்குடியின வகுப்பை சேர்ந்த ரவி கிருஷ்ணன் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனை அடுத்து ரவி கிருஷ்ணனுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வீடு கட்டுவதற்காக நிதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து ரவி கிருஷ்ணன் 1 லட்ச ரூபாய் முன்பணத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து வீடு கட்டும் பணியினை ஒப்படைத்தார்.
ஆனால் இதுவரை தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர் வீடு கட்டி கொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ரவி கிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் உடனடியாக ரவி கிருஷ்ணனுக்கு வீடு கட்டி கொடுக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் ஒப்பந்ததாரர் ரவி கிருஷ்ணனுக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.