டிஎம்டி கம்பிகள் கட்டுமான பணிகளுக்கு அத்தியாவசிய தேவை ஆகும். பெரிய நிறுவனங்கள் சுரங்கங்களில் இருந்து மூலப்பொருள்களை பெற்று டிஎம்டி கம்பிகளை தயார் செய்து வருகின்றனர். ஆனால் சிறிய அளவிலான நிறுவனங்கள் கழிவு இரும்பை பெற்று அதன் மூலம் டிஎம்டி கம்பிகளை தயாரிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இடையே ரூ.2,500 விலையில் வேறுபாடு உள்ளது. இந்த நிலையில் டிஎம்டி கம்பிகள் விலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இது வீடு கட்டுவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டிஎம்டி கம்பிகள் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் டன் ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் என்று விற்பனையாகி வந்தது. அதன்பிறகு பிப்ரவரி மாதம் முதல் வாரம் டிஎம்டி கம்பிகள் விலை ரூ.69 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால் தற்போது அனைத்து வகையான கம்பிகளும் டன்னுக்கு ரூ.6,000 உயர்ந்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கம்பிகள் விலை உயர்வால் வீடு கட்டுவோர் தற்போது கூடுதல் சுமையில் உள்ளனர். மேலும் நடுத்தர மக்கள் இதனால் வீடு கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.