கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருகண்டான்விளை பகுதியில் வசிக்கும் கிறிஸ்டோபர், தாஸ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக அரசின் அனுமதி பெற்று மணல் எடுத்துள்ளனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மணல் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மண் எடுத்த பகுதியை ஒட்டி இருக்கும் ஷீபா, காளிதாஸ், சுந்தர்ராஜ் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்ததாக விளாதுறை ஊராட்சி தலைவர் ஓமனா மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அறிந்த பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கௌஷிக் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளார். இதனையடுத்து மண் எடுத்த பகுதியில் விரைவாக தடுப்பு சுவரை கட்டி முடிக்க வேண்டும் என நில உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் தினமும் பணியை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராம நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.