மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் சோலைசேரி என்ற கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயதுடைய இளவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இளவரசன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அருகே உள்ள இடங்களில் சிறுவனை தேடி பார்த்தனர். அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் இளவரசனை அருகே இருக்கும் பெரியகுளத்தில் பார்த்ததாக கூறினார். உடனே இளவரசனது பெற்றோர் குளத்தின் அருகே சென்று தேடி பார்த்தனர் .
அப்போது இளவரசன் குளத்தின் மீது சடலமாக மிதந்ததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஊத்துமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிதனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளவரசனின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சிறுவன் குளத்தில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.