மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடைமை ஆக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதேபோல வேதா நிலையத்திற்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும், வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி சேஷசாயி இன்று தீர்ப்பளித்தார். அதில் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதையும், அரசுடைமை ஆக்கிய சட்டத்தையும், ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதி, வேதா நிலையத்துக்கு இழப்பீடாக உரிமையியல் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் வேதா நிலையத்தின் சாவியை 3 வாரங்களில் மனுதாரர்களான தீபா, தீபக் வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை சட்டப்படி வசூலிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.