ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் முருங்கைக்காடு பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 50 ஆண்டாக சின்னவீரசங்கலியில் இருக்கும் எனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தேன். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதால் தோட்டத்து வீட்டில் வசிக்கிறேன்.
எனது மகன் எனக்கு சரியாக உணவு கொடுக்கவில்லை. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மகளுடன் தங்கி இருக்கிறேன். அங்கும் வந்து எனது மகன் தொந்தரவு செய்கிறான். நான் வைத்திருந்த 4.5 லட்சம் சேமிப்பு பணத்தையும் எடுத்து சென்று விட்டான். எனவே எனது பணத்தையும், வீட்டையும் வைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.