ஊராட்சி மன்ற தலைவரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை கைது செய்யக் கோரி ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொட்டாரக்குடி ஊராட்சி மன்ற தலைவரான ராஜீவ்காந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜீவ்காந்தி வீட்டுக்கு அந்த நபர் தனது மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது ராஜீவ்காந்தி மற்றும் அவருடைய மனைவி சுமித்ராவை அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள், கொட்டாரக்குடி-கங்களாஞ்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.