பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு திடீரென்று 30 அடியில் ஒரு பள்ளம் உருவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பெங்களூரு டோனரி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் திடீரென நேற்று முன்தினம் 30 அடியில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் கொட்டிகேரேயில் இருந்து நாக சந்திரா பகுதிக்கு மெட்ரோ ரயில் பாதைக்காக சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும், அதனாலேயே இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
மேலும் வீட்டின் முன்பு பள்ளம் இருப்பதால் வீடு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும், தனது வீட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துக்கொண்டு அதற்கு உரிய நிவாரணம் வழங்கும் படியும் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் பார்வையிட்டு கான்கிரீட் போட்டு கொடுத்து அந்த பகுதி மூடப்படும் என்றும், முழுமையாக சேதம் அடைந்திருந்தால் உரிமையாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.