சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பள்ளி மாணவிகள் பள்ளிகளிலோ அல்லது வெளியிடங்களிலோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிலர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு அளிப்பதும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை மிரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். அந்த சிறுமியின் வீட்டிற்கு புதுப்பாளையம் ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் எலக்ட்ரீசியனான கணேசன்(26) என்பவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த 2017- ஆம் ஆண்டு சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த கணேஷ் அங்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னையும் உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன் என கணேஷ் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கணேசை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.