ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பேபி சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா இறந்து விட்டதால் பேபி சரோஜா தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் பேபி சரோஜா காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்ற போது பேபி சரோஜாவின் வீட்டு முன் கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஒரு மர்ம நபர் மாடியை நோக்கி வேகமாக ஓடி தப்பி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியின் மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பேபி சரோஜாவின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தலையில் காயத்துடன் சமையலறையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது பேபி சரோஜா அணிந்திருந்த நகை மற்றும் 2 வளையல்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கதவை உள்ப்புறமாக தாழ்ப்பாள் போட்டுள்ளார். அதன்பிறகு மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை மர்ம நபர் பறிக்க முயன்றபோது சரோஜா சத்தம் போட்டுள்ளார்.
அப்போது அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்ததால் மர்ம நபர் மூதாட்டியை அடித்து கீழே தள்ளி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர் அக்கம்பக்கத்தினரை பார்த்ததும் அச்சத்தில் தான் ஓட்டி வந்த ஸ்கூட்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த ஸ்கூட்டரை கைப்பற்றிய காவல்துறையினர் அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.