கோழி கூட்டில் இருந்த குஞ்சுகளை சாப்பிட்டு நாகப்பாம்பு உரிமையாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது
தேனி மாவட்டத்திலிருக்கும் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் அதிகமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். சமீப நாட்களாக இவரது வீட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் மாயமாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் 15 கோழி குஞ்சுகள் காணாமல் போனதால் செல்வம் குழப்பத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை சேவல்கள் கோழிக்குஞ்சுகள் என அனைத்தையும் கூண்டில் அடைத்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று காலை திடீரென கோழி கூண்டிலிருந்து கோழிகள் அலறும் சத்தம் கேட்டது.
இதனால் விரைந்து சென்ற செல்வம் கூண்டை திறந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கூண்டிற்குள் கோழிக்குஞ்சுகளை நாகப்பாம்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதோடு அவர் விரும்பி வளர்த்த சண்டைசேவல் இறந்து கிடந்தது. 5 கோழி குஞ்சு களில் ஒன்று மட்டும் பாம்பு உள்ளே வந்த வழியாக தப்பிச் சென்று உயிர் பிழைத்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் பாம்பை பிடித்து அய்யனார் கோவில் மலைப்பகுதியில் விட்டுள்ளார்.