தாய், மகள் இருவரையும் உறவினர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியில் போபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா(48) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா(28), மணிமேகலை(25) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மணிமேகலை கிணத்துக்கடவில் இருக்கும் ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்வருகிறார். இந்நிலையில் சுலோச்சனாவுக்கும் உறவினரான ஐயப்பன் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் சுலோச்சனாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால் சம்பவம் நடைபெற்ற அன்று ஐயப்பன் கோபத்தோடு சுலோச்சனாவின் வீட்டிற்கு சென்று அவரது கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்துள்ளார்.
அவரை சுலோச்சனாவும், மணிமேகலையும் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐயப்பன் தாய், மகள் இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.