திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஈவராஜன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ராஜன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு ராஜனின் வீட்டிற்குள் ஒரு வாலிபர் நுழைந்ததை உறவினர் சம்பத் என்பவர் பார்த்தார். இதுகுறித்து ராஜன் மற்றும் நண்பர்களுக்கு சம்பத் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இது குறித்து அறிந்த கிராம மக்களும், ராஜனின் உறவினர்களும் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்தனர். பின்னர் அந்த வாலிபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெண்ணாடம் சோழ நகரில் வசிக்கும் சூரியமூர்த்தி(27) என்பது தெரியவந்தது. இவர் ராஜனின் வீட்டில் திருட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சூரியமூர்த்தியை கைது செய்தனர்.