பூட்டிய வீட்டிற்குள் பேருந்து ஓட்டுநர் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே மேட்டுக்கடை முல்லை நகர் பகுதியில் பிரபா சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவட்டார் பணிமனையில் அரசு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் பிரபாசிங் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாசிங் செல்போனுக்கு அவருடைய மனைவி பலமுறை போன் செய்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் பிரபாசிங் போனை எடுக்காததால், இதுகுறித்து உறவினரிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்பிறகு பிரபாசிங் வீட்டிற்கு உறவினர்கள் சென்று பார்த்தனர். அப்போது பிரபாசிங் வீட்டிற்குள் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபாசிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்