சேத்தியாத்தோப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கீழ மூவர் கரை பகுதியைச் சேர்ந்த கோபி (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தங்கை அருள் மொழியுடன் திருவண்ணாமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர்களது கார் நேற்று காலை கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி வளையமாதேவி அரிசி ஆலை அருகே ஒரு வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது மோதியுள்ளது. மேலும் அருகில் இருந்த அம்புஜவல்லி என்பவர் வீட்டின் சுவரை உடைத்து மோதி கார் நின்றுள்ளது.
இந்த விபத்தில் கோபி, அருள்மொழி மற்றும் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ராஜேந்திரனின் மனைவி சுமதி போன்றோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த வளையமாதேவி கிராம மக்கள் அங்கு திரண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் இங்கு விபத்து நடைபெறுவதை தடுக்கும் விதமாக வேகத்தடை பேரிகார்ட் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.