கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜேந்திரன் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டிற்குள் வெள்ளை நிறப் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து ஜெய்ப்பால் அதிர்ச்சியடைந்தார். அதன் அருகே சென்ற போது பாம்பு படம் எடுத்து சீறியதால் ராஜேந்திரன் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிக்குமார் என்பவர் விரைந்து வந்து துணிச்சலாக பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்தார். இந்த பாம்பை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்தனர்.
அது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பாம்பை மீட்டு பாலமலை வனப்பகுதியில் விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, அந்த வெள்ளை பாம்பு 3.5 அடி நீளம் உடையது. நாகப்பாம்பு வகையை சேர்ந்த அது அட்மினிசம் குறைபாடு காரணமாக வெள்ளை நிறத்தில் இருக்கிறது என கூறியுள்ளனர்.