கூலி தொழிலாளி வீட்டில் புகுந்த 10 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள புதூர் ரயில் ரோடு தெருவில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டில் இருந்த போது பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காசி உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு காசி வீட்டில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்துள்ளனர். மேலும் அந்த பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.