மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தொழிலாளி தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கடம்பத்தூரில் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் அருகில் குடிசை வீடு அமைத்து கடந்த 20 வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டை சுற்றி வசிக்கும் சிலர் வீட்டை காலி செய்யுமாறு கார்த்திக்கை வற்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து கார்த்திக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் வீட்டை அபகரிக்க நோக்கத்தில் கார்த்திக்கின் வீட்டை சுற்றி சிலர் பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பிளேடால் தனது கையை வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் கார்த்திக்கை தடுத்து நிறுத்தி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.