தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரூபாவதி(20), தாமரைச்செல்வி(17) என்ற 2 மகள்களும், நிஷாந்த்(16) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் தாமரைச்செல்வி வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பும், நிஷாந்த் 10-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் தங்களுக்கு தெரிவிக்குமாறு கூறிவிட்டு ராஜாவும், ரேவதியும் வேலைக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள அக்காள், தம்பி இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது 3 பாடங்களில் தாமரைச்செல்வி தோல்வி அடைந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கிடையில் அக்காள் 3 பாடங்களில் தோல்வியடைந்ததை அறிந்த நிஷாந்த் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தாமரைச்செல்வி தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதான். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தாமரைச்செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.