லாரி ஏறி இறங்கியதால் விபத்தில் சிக்கிய இன்ஜினியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரான உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் வேலை முடிந்த பிறகு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் வேளச்சேரி பிரதான சாலையில் இருக்கும் தனியார் பொழுதுபோக்கு மையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரமாக நின்ற காரின் பின்புறம் உதயகுமாரின் மோட்டார்சைக்கிள் பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த உதயகுமார் மீது பின்னால் வந்த சிமெண்ட் கலவை லாரி ஏறி இறங்கியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான செல்வ குமார் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.