தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் இரண்டு மகள்கள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அர்ச்சனா, அஞ்சலி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் கணவர் ஜோதிலிங்கம் இறந்து விட்டார். இதனால் விஜயலட்சுமி தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமியின் உறவினர் ஒருவர் அவருடைய வீட்டு கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார்.
ஆனாலும் அவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார். அப்போது வீடு முழுவதும் தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்த போது சமயலறையில் விஜயலட்சுமியும், அஞ்சலியும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் படுக்கை அறையில் அர்ச்சனா சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டு யுபிஎஸ் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தாயும், இரண்டு மகள்களும் இறந்தது தெரியவந்துள்ளது.