குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை தாண்டிதான் மணி வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து மணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் வீட்டிற்கு வராத மணியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
மறுநாள் காலை குளத்தில் மணியின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.