கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் புகைப்படக்கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தரமணி தந்தை பெரியார் நகரில் புகைப்பட கலைஞரான சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஜய நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று புகைப்படங்களை எடுத்து விட்டு அதிகாலை 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தரமணி 100 அடி சாலையில் இருக்கும் தனியார் ஏ.டி.எம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென சிவகுமாரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதிவிட்டது.
இதனால் படுகாயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.