மழை வெள்ளத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, தீனட்டி உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான பகுதியில் இருக்கும் வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இந்நிலையில் தீனட்டி கிராமத்தை சேர்ந்த ஹாலம்மாள் என்பவர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கனமழை பெய்ததால் ஹாலம்மாள் பணியை கைவிட்டு வீட்டிற்கு செல்ல சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது மழை வெள்ளத்தில் சிக்கி ஹாலம்மாள் அடித்து செல்லப்பட்டார். இதனை அறியாத உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது இன்று காலை சாலையோர முட்புதரில் ஹாலம்மாள் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.