கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெப்பந்தட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட ஆரோக்கியசாமி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி சுவேதா தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
இந்நிலையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பெரியம்மாபாளையம் பிரிவு அருகில் வாயில் நுரை தள்ளியபடி ஆரோக்கிய சாமி இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆரோக்கிய சாமியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.