நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த மணக்காடு கிராமம் கட்டளை தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் உள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி அதன் மூலம் தொழில் செய்து வந்தார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தையும், ஒன்பது வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் காளிதாஸ்க்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதனால் பீரோவை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மனைவி பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் வந்து பார்த்தபோது காளிதாஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காரியாபட்டியில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.