தமிழகத்தில் வாக்காளர்களுக்கு இலவசமாக வீட்டிற்கு வண்ணப் புகைப்பட வாக்காளர் அட்டை அனுப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது..
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் தொடர்பான சேவைகள் வாக்காளர்களுக்கு விரைவாக சென்றடையக் கூடிய வகையில் விரைவு அஞ்சல் மூலம் புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் முதல் வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக சேர்க்கப்படும் புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டிற்கே வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். அதற்காக அஞ்சல்துறை உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான இடர்பாடுகளும் இன்றி வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதை உறுதிப் படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.