டிஜிட்டல் முறை வாக்காளர் அட்டையை ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை குறித்து இங்கு தொகுத்து தெரிந்து கொள்வோம்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக பலர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர் அட்டையை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். முதல்கட்டமாக இந்த வசதி தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 21.39 லட்சம் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமின் போது பட்டியலில் பெயர் சேர்த்தலின் போது தாங்கள் வழங்கிய செல்பேசி எண்ணை கொண்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர் அட்டையை பதிவு செய்து கொள்ளலாம்.
http://votersportal.eci.gov.in / அல்லது http://www.nvsp.in/ என்ற இணையதள முகவரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களும் இந்த வசதியை விரைவில் பயன்படுத்தலாம். பட்டியலில் பெயரைச் சேர்த்துள்ள 20 வயது கல்லூரி மாணவி இதுபற்றிக் கூறுகையில், என்னுடைய சகோதரர் சகோதரிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து இருந்தாலும், இதுவரை அவர்களுக்கு அட்டை கிடைக்கவில்லை. நான் இந்த முறை தான் என் பெயரை சேர்த்தேன். உடனே இணையதளத்தின் வாயிலாக வண்ண நிறத்தில் என்னுடைய வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொண்டுள்ளேன். அதைப் பார்த்தால் அசல் வாக்காளர் அட்டையை போன்றே உள்ளது என்று அவர் கூறினார்.