மயிலாடுதுறையில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அருகே இருக்கும் சேத்திரபாலபுரம் ரயில்வேகேட் பகுதியில் நேற்று முன் தினம் காலை ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் குற்றாலம் அருகே உள்ள பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரதீப் என்பது தெரிய வந்தது.
இவர் சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே தொலைதூரக் கல்வி மூலம் தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்ததும் சென்ற பத்து நாட்களுக்கு முன்பாக தேரழுந்தூருக்கு வந்ததும் தெரிந்தது. மேலும் அவர் சென்ற 8-ம் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிந்தது. இதனால் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.