சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் தகுதிகள் தீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கணவனை இழந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பெண் தனது குழந்தையை கொரோனா பாதிப்பு காரணமாக விடுதியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த தீனா தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தேன்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீனாவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆர். மாலனி தீனாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்தார். மேலும் அபராதம் செலுத்த தவறினால் 3 மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 லட்சம் இழப்பீடு மாவட்ட ஆட்சியரின் நிதியில் இருந்து வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.