பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் (54) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் நாகராஜன் கோவையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் அங்கேயே தங்கி இருந்து வேலை செய்வதால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வார். இவர்களது மகள் கார்த்திகா சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த தங்கம் விவசாயம் உள்ளிட்ட வேலைகளுக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தங்கம் வீட்டில் இறந்து கிடந்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்ட போது தலையில் ரத்தக்காயத்துடன் தங்கம் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கத்தை கொலை செய்தவர் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.