வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அக்ரஹாரம் பகுதியில் அரசுமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் அரசு மணி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஜூன் மாதம் வீட்டிற்கு வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அரசுமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கூடலூர் லாரஸ்டன் தெய்வமலை பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.