பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண் ரத்த காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுப்பட்டான் கட்டை பகுதியில் வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜா என்பவருக்கு தனது சொந்தமான வீடு ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். தற்போது கடந்த 5 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளரான வெள்ளியங்கிரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளியங்கிரி ராஜாவின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து வெள்ளியங்கிரி பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் முகம் முழுவதும் வீக்கத்துடன் இருந்ததால் அந்த பெண் யார்? என்று அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் இந்த பெண் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.