ரிசர்வ் வங்கியின் பண கொள்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து கொள்கை கூட்டம் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நேற்று வெளியிட்டார். அதில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதன் பிறகு ஜூன் மாதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம். எனவே இந்த வட்டி விகிதம் உயர்ந்தால் வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள். அதன் விளைவாக வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனி நபர் கடன் போன்ற சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும். இதனால் கடனுக்கான இஎம்ஐ கட்டணம் உயரும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக கடன் வாங்குபவர்கள் என இரு தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.