கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரில் தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், வினைதீபக் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வினைதீபக் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி குஜராத்தில் இருக்கும் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக கவிதா சென்று விட்டார். கடந்த சில நாட்களாக தீபக் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தீபக் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் இறந்து கிடந்த தீபக்கின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.