கோவிலின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மாசி மாதம் என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று விசுவநாதர் சாமிக்கி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் பூசாரி வழக்கம் போல் கோவிலின் கதவை பூட்டிவிட்டு சாவியை கோவில் தலைவரான முருகனிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பூசாரி நேற்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் எடை கொண்ட தங்கதாலி மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்கம் மற்றும் வெள்ளியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.