தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூச்சுத் திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆனால் லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே நடமாடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் 2000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், அவர்கள் வெளியே நடமாடும் போது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதத்துடன் கொரோனா மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் வெளியே நடமாடுபவர்கள் பற்றி 044-25384520 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.