வீட்டு வாடகை பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை 120 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு கெடு கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இடங்களை வாங்கி வீடுகளை கட்டி அதனை வாடகைக்கு விடும் வழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதனை வாடகைக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். பல இடங்களில் எழுத்துப்பூர்வமான எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வீடு மனைகள் வாடகைக்கு விடப்படுகின்றது. இதனால் உரிமையாளர் வாடகைதாரர் இடையே எழும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் வாடகை வீட்டு வசதி திட்டம் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 2019 ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் வீட்டை வாடகைக்கு விடும் போது அதற்கான ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் வாடகை தொகை தொடர்பான பிரச்சனைகளை விசாரிக்க மாவட்டம் தோறும் நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பாயங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. வீட்டு வாடகை தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை 120 நாட்களுக்குள் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது. தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வேறு நீதிமன்றங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகை தொடர்பான வழக்குகளை பல ஆண்டுகளுக்கு இழுத்துக்கொண்டு இருக்கமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.