பாட்டி ஒருவர் தன் வீட்டை விற்றும் பேரனின் உயிரை காப்பாற்ற முடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறியை அடுத்த தினவிளை பகுதியில் விவசாய கூலி வேலை பார்க்கும் சுந்தர்ராஜ் , ரோசம்மாள் தம்பதியர் இருந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருந்த நிலையில் அவர்கள் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் சென்று விட்டதால் இந்த வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்குத் துணையாக தங்கள் மகள் வழி பேரன் ஜெகனை சிறுவயது முதலே வளர்த்து தங்கள் பராமரிப்பில் படிக்கவைத்து வந்தனர்.
இதனையடுத்து தன் பேரனை கடந்த ஒரு வருடத்திற்கு முன் பல லட்சம் ரூபாய் செலவழித்து தாத்தாவும், பாட்டியும் வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி உள்ளனர். இதன்பின்பு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்ற பேரன் வேலைக்குப்போன ஒரு சில வாரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊருக்கு வர முடியாமல் மிகவும் அவதிக்குள்ளானார்.
இதனை அறிந்த பாட்டி, தன் பேரனுக்காக மீண்டும் பணம் செலவழித்து சொந்த ஊருக்கு அழைத்து வந்து மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டார். இந்நிலையில் தான் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்று பேரனின் உயிரை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த சில மாதங்களுக்கு முன் பேரன் உயிரிழந்துள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த பாட்டி ரோசம்மாள் உணவு உண்ணாமல் வருத்தத்திலே இருந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2ஆம் தேதி காலை விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் கிடந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரோசம்மாள் உயிரிழந்தார். பின் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தற்கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பேரன் இறந்த துக்கத்தில் பாட்டியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.