ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சேகரன் சேசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேர்ளின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கேர்ளின் புகார் மனு அளிப்பதற்காக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் வைத்திருந்திருந்த புகார் பெட்டியில் மனுவை போட்டுள்ளார்.
இதனையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே கேர்ளின் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக கேர்ளினை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் கேர்ளின் புகார் பேட்டியில் போட்ட மனுவை எடுத்து பார்த்ததில் கேர்ளினின் தந்தை, தம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கேர்ளின் வசிக்கும் வீட்டை அபகரிக்கும் நோக்கில் அடிக்கடி தொல்லை கொடுப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இருந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.